சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் அந்தியூர் மற்றும் தவுட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவரும் நின்று கொண்டிருந்தனர். அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மதுரையைச் சேர்ந்த பாப்பா என்பதும், மற்றொருவர் கோபியைச் சேர்ந்த சந்தியாகு என்பதும் தெரியவந்தது. மேலும் பாப்பா மதுரையிலிருந்து அந்தியூருக்கு பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்து அதனை சந்தியாகுவிடம் விற்க கொடுத்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பாப்பா மற்றும் சந்தியாகுவை கைது செய்தனர். இதேபோன்று அத்தாணி தனியார் வங்கி அருகில் தனிப்பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படி ஒரு பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் ராதாமணி என்பதும், தனது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராதாமணியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.