இங்கிலாந்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி தாமாக முன்வந்து காவல்துறையில் சரணடைந்த காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இங்கிலாந்தின் சன்செக்ஸ் மாகாணத்தை சேர்ந்த காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளி தாமாக முன்வந்து சரணடைந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவர் மீது பல குற்ற சம்பவங்களில் கீழ் புகார்கள் இருக்கிறது. இதனால் இவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது இவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். ஆனால் இவருக்கு குடும்ப வாழ்க்கையில் அதிர்ப்தி ஏற்பட்டது. அதனால் தனக்குத் அமைதி தேவை என்றும், குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாகுவதுடன் காவல்துறையில் சரணடைவதே மேலானது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் சிறைக்கு சென்றால் தனக்கு அமைதியான நேரம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இவரின் இந்தக் கூற்றைக் கேட்ட காவல்துறையினர் வியப்பில் மூழ்கினர். இதனைக் கேட்டு ஆச்சரியப்பட்ட சன்செக்ஸ் மாகாண காவல் நிலைய ஆய்வாளரான டேரன் டைலர் என்பவர் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதில் ஒருவர் இந்த குற்றவாளிக்கு வீட்டு காவலுக்கு அனுப்பி வைப்பதே சிறந்த தண்டனையாக இருக்கும் என்று நக்கலடித்து கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொருவர், இப்படிப்பட்ட மிகப்பெரிய குற்றவாளியையே அமைதியை தேடி ஓட வைத்தனர் என்றால் இவரது குடும்பத்தினர் எப்படிப்பட்ட மனம் படைத்தவர்களாக இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார். இப்படி பல்வேறு கமெண்ட்டுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.