பெண்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தலீபான்களின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தலீபான்களின் உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் “நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஒருவேளை போராட்டம் நடத்தப்பட வேண்டுமென்றால் முன்னதாகவே அனுமதி பெறுதல் வேண்டும். அதிலும் போராட்டத்தில் முழக்கமிடுதல், வாசகங்கள் ஏந்திச் செல்லுதல் போன்ற செயல்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 1990களில் ஆட்சி புரிந்த தலீபான்கள் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் போன்றவற்றை மறுத்துள்ளனர். குறிப்பாக பெண்கள் கடுமையான மதக்கோட்பாடுகளின் படி துன்புறுத்தப்பட்டனர்.
இதன் காரணமாக தற்பொழுது ஆப்கானை கைப்பற்றியுள்ள தலீபான்கள் பெண்களுக்கான உரிமைளை பறித்துவிடுவார்களோ என்ற பயவுணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தலீபான்களின் புதிய ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்றும் அரசியலில் இடம்பெறுவார்கள் எனவும் உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் தங்களுக்கான உரிமையை வேண்டி பெண்கள் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை தலீபான்கள் அறிவித்த இடைக்கால ஆட்சியில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலில் பெண்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பெண்களை தலீபான்கள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.