பெண்களுக்கான உதவி மையத்தை தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று டி.ஐ.ஜி. அறிவுரை கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி மையம் 18 காவல் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. பாண்டியனால் இணையதளத்தின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து பெண்கள் உதவி மைய காவல் அலுவலர்களுக்கான அறிமுக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் காவல் துறை கூடுதல் இயக்குனர் சீமாஅகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் மத்திய அரசின் நிர்பயா நிதியிலிருந்து மேற்கண்ட பெண்கள் உதவி மையம் ஒவ்வொன்றுக்கும் மடிக்கணினி, இருசக்கரவாகனம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனை பயன்படுத்தி காவல் நிலையங்களுக்கு வரும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவைப்படும் சட்டம், பாதுகாப்பு, மருத்துவம் சார்ந்த உதவிகள், அரசின் நலத்திட்டங்கள், மனநல ஆலோசனைகள் போன்றவற்றை விரைவாக திறம்பட செயல்படுத்தும்மாறும் டி.ஐ.ஜி. பாண்டியன் அறிவுரை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறும்போது, மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்து அவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு உறுதியளித்தார். அதன்பின் பெண்கள் உதவி மைய எண் 181 சுவரொட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றதடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, குற்ற வழக்கு துறை உதவி இயக்குனர் செல்வராஜ், மகளிர் நீதிமன்றம் அரசு வக்கீல் செந்தில், சுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர் தமிழன்பன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.