கணவரின் மது குடிக்கும் பழக்கத்தால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிச்சம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் சங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சங்கர் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை மனைவி பலமுறை கண்டித்தும் சங்கர் மதுப்பழக்கத்தை கைவிட மறுத்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் சங்கர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் கணவன்-மனைவியிடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் மனமுடைந்த பிச்சம்மாள் வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
இதனையடுத்து திடீரென பிச்சம்மாள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்த பிச்சம்மாள் அருகில் பாயில் படுத்திருந்த மகன் முத்துகிருஷ்ணன் மீதும் எதிர்பாரத விதமாக தீப்பற்றியது. இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து பலத்த காயங்களுடன் இருந்த பிச்சம்மாள் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமானைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிச்சம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மகன் முத்து கிருஷ்ணனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.