இறைச்சிக்கடைக்காரர் ஒருவர் இளம்பெண்ணையும் அவரது குழந்தையையும் கொன்று துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி குளத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் கல்லூரியில் படிக்கும்போது சிலம்பரசன் என்ற இறைச்சிக்கடைக்காரரை காதலித்துள்ளார். ஆனால் சிலம்பரசனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இதற்கிடையே 2018 ஆம் ஆண்டு கலைச்செல்வியின் பெற்றோர் காசிராஜன் என்பவருக்கு தங்களது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இத்தம்பதியருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. திருமணத்திற்கு பிறகும் சிலம்பரசனுடன் தனது உறவை தொடர்ந்த கலைச்செல்வி அவருக்கு தேவைப்படும் போதெல்லாம் பணத்தையும் நகையையும் கொடுத்து உதவியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கணவருடன் சண்டையிட்டு தந்தை வீட்டில் வசித்து வந்த கலைச்செல்வி அடிக்கடி சிலம்பரசனை சந்திக்க சென்றுள்ளார். பின்னர் 2020 செப்டம்பர் 9ம் தேதி சிலம்பரசன் தனது மனைவியையும் குழந்தைகளையும் வெளியே அனுப்பிவிட்டு கலைச்செல்வியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது கலைச்செல்வி என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள் அப்படி இல்லையென்றால் என் பணத்தையும், நகையையும் கொடு என்று சிலம்பரசனிடம் சண்டையிட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கலைச்செல்வியும் அவரது ஒரு வயது மகனையும் கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்று விட்டு தனது இறைச்சி கடையில் வேலை செய்யும் சிறுவனை கத்தியை எடுத்து வரச்சொல்லியுள்ளார். பின்னர் இருவரது உடலையும் துண்டு துண்டாக வெட்டி சதையையும் எலும்பையும் தனியாக பிரித்து சாக்குமூட்டையில் கட்டி குளத்தில் சிறுவன் துணையுடன் சிலம்பரசன் வீசியுள்ளார்.
இந்நிலையில் கலைச்செல்வியை காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் செய்த விசாரணையில் சிலம்பரசன் செய்த இந்த கொடூர செயல் வெளிவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் சிலம்பரசனையும், அந்த சிறுவனையும் கைது செய்துள்ளனர். மேலும் சிலம்பரசன் கூறிய தகவலின் அடிப்படையில் சாக்கு மூட்டைகளில் உள்ள உடல்களை கைப்பற்றி தடவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.