பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகையை பறித்து சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். அப்போது அதில் ஒரு நபர் திடீரென பாத்திமாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். இதனையடுத்து மற்றொரு நபர் பாத்திமாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதில் சுதாரித்துக்கொண்ட பாத்திமா கத்தியை தட்டி விட முயன்றுள்ளார்.
அப்போது 2 வாலிபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாத்திமா தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகையை பறித்து சென்றது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் சுந்தரபாண்டி, கார்லீன், முருகன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 3 பவுன் தங்க சங்கிலி, வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.