பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவழுதிநாடார்விளை பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏரலில் உள்ள ஜவுளிக் கடையில் லோடு வேன் டிரைவராக உள்ளார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி பொங்கல் பண்டிகைக்காக ஏரல் பஜாரில் பொருட்களை வாங்கிக் கொண்டு சினிமா தியேட்டரில் இருந்து மங்கல குறிச்சி செல்லும் சாலையில் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென புவனேஸ்வரி கழுத்தில் கிடந்த 3 3\4 பவுன் தங்க சங்கிலியை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து புவனேஸ்வரி ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.