பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரி தங்கம். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் நைசாக மாரி தங்கத்திடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் தங்களிடம் 8 பவுன் தங்க நாணயங்கள் மற்றும் காசு மணிகள் உள்ளதாக கூறியுள்ளனர். இந்த நாணயங்களை பெற்றுக்கொண்டு இதற்கு பதிலாக 5 பவுன் தங்க நகைகளை தந்தால் போதும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
அவர்கள் சொன்னதை நம்பி மாரி தங்கமும் தன்னிடம் இருந்த 5 பவுன் தங்க நகையை கழற்றி கொடுத்துள்ளார். நகையை பெற்றுக்கொண்ட அந்த பெண்கள் இருவரும் தங்களிடமிருந்த தங்க நாணயங்களை கொடுத்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மாரி தங்கம் அந்த நாணயங்களை கடைக்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நகையை பறித்துச் சென்ற இரண்டு பெண்களையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.