பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுடலி மருதம்புத்தூர் – கரும்புளியூத்து சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சுடலி மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சுடலி கழுத்தில் போட்டிருந்த தங்கச்சங்கிலியின் 9 கிராம் எடையுள்ள ஒரு பகுதியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து சுடலி ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்ததில் மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் நாகராஜா என்பவர் தான் தங்க சங்கிலியை பறித்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நாகராஜாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் நல்லூர் பகுதியில் வசிக்கும் மகேஷ் என்பவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து மருதம்புத்தூர், ஆலங்குளம், நல்லூர் ஆகிய பகுதிகளில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நாகராஜா மற்றும் மகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 9 கிராம் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர்.