தாய்க்கு இருமுறை தடுப்பூசி செலுத்தியதால் மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள இருளர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லட்சுமி சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அருகில் இருந்த மற்றொருவரிடம் பேசிக்கொண்டே லட்சுமிக்கு தடுப்பூசி முதல் டோஸ் போட்டுள்ளார். அதன்பின் அவருக்கு தடுப்பூசி போட்டதை அறியாமல் திரும்பவும் அவர் தடுப்பூசி போட்டுள்ளார்.
பின்னர் பதறிப்போன லட்சுமி தனக்கு ஏற்கனவே தடுப்பு ஊசி போட்டதாக செவிலியரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த மகன் அய்யப்பன் செவிலியரிடம் சென்று கேட்ட போது அவர் நான் ஒரு முறை தான் தடுப்பூசி போட்டேன் என கூறியுள்ளார். இதனால் செவிலியருக்கும் மற்றும் லட்சுமியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் லட்சுமி தனக்கு இரண்டு முறை தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட தழும்பை அங்கிருந்த மருத்துவரிடம் காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சுமியை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவ அலுவலரிடம் கேட்ட போது, சராசரியாக ஒரு மனிதனின் உடலில் 0.5 எம்.எல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஒரு மனிதனுக்கு உடலில் சராசரியாக 1 எம்.எல் அளவிற்கு தடுப்பு செலுத்தலாம். இதனால் லட்சுமிக்கு இரு முறை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் அவரின் பயத்தை போக்க லட்சுமியை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம் என மருத்துவ அலுவலர் கூறியுள்ளார்.