பெண்ணிடம் நகை பறித்த 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருக்கின்றார். இவர் ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவிதா வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மொடக்குறிச்சி மொட்ட பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 5 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலியைப் பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கவிதா மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் சாவடிப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன், மணிகண்டன், பிரவீன்குமார், வெள்ளையன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அந்த வாலிபர்கள் மொடக்குறிச்சி அருகே ரேஷன் கடை பெண் ஊழியரிடம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனையடுத்து விசாரணையில் கரூர் மாவட்ட காவல் நிலையத்தில் இந்த இளைஞர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்தது காவல்துறையினற்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 5 வாலிபர்களையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.