கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வந்தது. அதாவது பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சியின் சந்தை மதிப்பு அதிகரித்ததால் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு இந்தியாவில் 30% வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்நிலையில் கிரிப்டோ கரன்சியின் பங்குகளை ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த 4 பென்சன் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக அந்நாட்டு செய்தித்தாளில் தகவல் வெளியாகியுள்ளது. இது அந்நாட்டு ஓய்வூதியதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிரிப்டோகரன்சி நிறுவனமான காயின்பேஸ் அண்மையில் தன்னுடைய 87 விழுக்காடு பங்கை இழந்துள்ள நிலையில், தற்போது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் பங்குகளை வாங்கி உள்ளதாக வெளியான தகவல் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் காயின் பேஸ் நிறுவனத்திடம் இருந்து எத்தனை பங்குகளை வாங்கியுள்ளது என்று விவரம் வெளியாகவில்லை. இதனால் கிரிப்டோ கரன்சி மீண்டும் எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஆனால் கிரிப்டோ கரன்சியை ஒரு சொத்தாகவே கருத முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் கிரிப்டோ கரன்சியின் முதலீட்டு எதிர்காலம் என்பது கேள்விக்குறி தான் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.