ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல, ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
கொரோனா வைரஸால் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொழில்களும் முடங்கப்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டது.
இதனிடையே மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றோரின் ஓய்வூதியமும் 20 சதவீதம் குறைக்கப்படும் என்றும் சிறிது காலத்துக்கு நிறுத்திவைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் துறை மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மத்திய அரசின் மூத்த குடிமகன்களுக்கு ஓய்வூதியத்தை குறைக்கும் திட்டமோ அல்லது நிறுத்தும் திட்டமோ ஏதும் இல்லை. வழங்கம்போல ஓய்வூதியம் வழங்கப்படும். கொரோனா தடுக்கு நடவடிக்கைக்கு ஓய்வூதியத்தை பயன்படுத்தும் முடிவை அரசு எடுக்காது. மாறாக ஓய்வூதியதாரர்கள் நலனில் மத்திய அரசு முழுமையாக அக்கறை கொண்டு செயல்படுகிறது. ஓய்வூதியம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசின் விளக்கத்தை பகிர்ந்து முன்னர் தெரிவித்ததம்படி, ஓய்வூதியத்தைக் குறைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. மாறாக ஓய்வூதியதாரர்களின் நல்வாழ்விற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.