கிருஷ்ணகிரியில் பிறந்து நான்கு நாட்களில் இறந்து போன பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி சுதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அவருக்கு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. பின் 16ம் தேதி அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார்.
பின் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது குழந்தை இறந்து விட்டதாகவும், அதை நாங்களே புதைத்து விட்டதாகவும் தெரிவித்தார். பின் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். அதில் இங்கு பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
குழந்தை பிறந்தபின் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மருத்துவமனையிலிருந்து சென்றதாகவும், குழந்தை இறந்ததையும் தெரிவிக்காமல் அவர்களே புதைத்துள்ளதால் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து புகாரை ஏற்று திருவள்ளூர் நோக்கி சென்ற காவல்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தாயின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.