விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கான அபராதம் பற்றிய தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது
பொது இடங்களில் எச்சில் துப்புவது முக கவசம் அணியாமல் இருப்பது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராத தொகை குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் விதிமீறல்கள் வரையறை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 138 விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் சில பிரிவுகள் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் அலுவலர் தெரிவிக்கும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். இல்லை என்றால் ஒவ்வொரு முறையும் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும். முகக்கவசத்தை வாய் மற்றும் மூக்கு முழுவதும் மூடும் படி அணிய வேண்டும். இல்லையென்றால் 200 ரூபாய் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும். அதேபோன்று பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அழகு நிலையம், சலூன் கடைகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற இடங்களில் விதிமுறைகளை பின்பற்றா விட்டால் 5,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் விதிமுறையை சரியாக பின்பற்றாவிட்டால் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் அபராதமும் வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் இதன் காரணமாகவே தற்போது அபராதம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது