புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் வாகனம் ஓட்டிய 250 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
சென்னை மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து துறை போலீசார் சுமார் 300 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய காரணத்திற்காக 250 பேரையும், அதிவேகமாக வாகனங்களில் சென்றதற்காக 100 பேரையும் போக்குவரத்து காவல்துறை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார்
அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். மேலும் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்ற 100 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப்பற்றி போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கண்ணன் கூறிய போது, இந்த புத்தாண்டு தினத்தில் காவல்துறையின் அறிவுறுத்தலின் படி பொதுமக்கள் பலர் ஒத்துழைப்பு கொடுத்ததால் அதிகளவு விபத்துகள் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் சென்னையில் புத்தாண்டு தினத்தில் 2 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு விபத்தில் 10 பேரும், 2019 ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று நடந்த விபத்தில் 18 பேரும், 2020ஆம் ஆண்டு புத்தாண்டு விபத்தில் 9 பேரும் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர் என்ற புள்ளி விவரத்தையும் போக்குவரத்து துறை போலீசார் வெளியிட்டுள்ளனர்.