தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி நூல்களை பொதுமக்களுக்கு விலை இல்லாமல் விநியோகம் செய்தோம். மனுஸ்ருதியை 1927-ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ”தீ வைத்து” கொளுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தந்தை பெரியார் அவர்களும் குடியாத்தம் மாநாட்டில் ”மனுஸ்மிருதியை” கொளுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி,
அதை தொடர்ந்து திராவிட கழகத்தினர் ஆங்காங்கே மனுஸ்மிருதிகளை தொடர்ந்து பல ஆண்டுகளில் கொளுத்திருக்கிறார்கள். மனுஸ்மிருதி என்பது இந்து சமூகத்தின் வேத நூலாக, வழிகாட்டும் நெறிமுறைகளை கொண்ட நூலாக விளங்குகிறது. இன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும், முரண்பாடுகளுக்கும், சாதிய பாகுபாடுகளுக்கும், பாலின பாகுபாடுகளுக்கும், அடிப்படை கருத்தியல் மனுஸ்ருதி தான்.
இன்றைக்கு மனுஷ்மிருதியை மக்களிடத்திலே நாம் அறிமுகப்படுத்துவதற்கு காரணம்… மனுஷ்மிருதியை தமது அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ், மக்கள் இயக்கம் போல் தம்மை காட்டிக் கொள்வதற்காக முயற்சிக்கிறது. உள்ளபடி ஆர்எஸ்எஸ் இயக்கம் பிற இயக்கங்களைப் போல ஒரு சராசரியான மக்கள் இயக்கம் இல்லை. ஜனநாயக இயக்கம் இல்லை, சராசரியாக ஒரு கலாச்சார இயக்கமாகவும் இல்லை. அது அடிப்படையில் மதவாத அரசியலை, வெறுப்பு அரசியலை, வர்ண பாகுபாடு அரசியலைக் கொண்டிருக்கிறது. அது ஒரு முறைக்கு இரு முறை தடை செய்யப்பட்ட இயக்கம்.
காந்தியடிகளை கொன்ற இயக்கம், காமராஜரை கொல்ல முயன்ற இயக்கம். பாபர் மசூதியை இடித்த இயக்கம், குஜராத் படுகொலையை நடத்திய இயக்கம். தொடர்ந்து லவ்- ஜிகாத் என்றும், கர்வாக்ஷி என்றும், கோழி கவ் – பசு புனிதம் என்றும் பல்வேறு பெயர்களில் முஸ்லிம் இயக்கங்களையும், கிறிஸ்துவ இயக்கங்களையும் இந்த மண்ணில் வெறுக்கின்ற இயக்கம்.
இந்தியர்களை இந்துக்கள் என்றும், இந்துக்கள் அல்லாதவர்கள் என்றும் பிளவுபடுத்துகிற இயக்கம். இந்துக்களை மேல் சாதி, கீழ் சாதி என்று பிளவுபடுத்தி, அவர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற இயக்கம். சமூக ஒற்றுமைக்கு எதிரான இயக்கம். ஆகவே தான் இந்த இயக்கம் தமிழ்நாட்டில் வேரூன்றுவது ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம் என தெரிவித்தார்.