விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவண்ணைநல்லூர் அருகே சித்தலிங்க மடம் என்ற ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியை இரண்டாகப் பிரித்து டி. எட்டப்பாளையம் என்ற பகுதியில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி அதிகாரிகள் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் கடைகளை அடைத்து விட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பலனளிக்காததால் அமைச்சர் பொன்முடி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அரை மணி நேரமாக கிராம மக்களிடம் பேசியும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. ஆனால் கிராம மக்கள் அனைவரும் அமைச்சர் பொன்முடியை சுற்றி வளைத்ததுடன் அவரிடம் சரமாரியான கேள்வியை முன் வைத்தனர்.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அமைச்சர் கிராம மக்களை ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பலத்தமான சூழல் ஏற்படவே போலீசார் அமைச்சர் பொன்முடியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். சமீபத்தில் கூட இலவச பயணத்தை பெண்களின் ஓசி பயணம் என்று அமைச்சர் பொன்முடி கூறியது சர்ச்சையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து தற்போது கிராம மக்களிடமும் அவர் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் அமைச்சர் பொன் முடியின் சர்ச்சை வார்த்தைகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.