மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் திடீரென 69 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த குழந்தைகள் சிறுநீரக பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனைக்கு காரணம் இந்தியாவில் உள்ள மெய்டன் பாராசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 மருந்துகள் தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மெய்டன் பாராசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் மருந்துகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேசியா நாட்டில் சிறுநீரக பாதிப்பின் காரணமாக 241 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 133 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த தகவலை அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் புதி குணாதி சாதிக்கப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தோனேசியா அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து அந்நாட்டில் அனைத்து வகையான சிரப் மற்றும் நீர்ம மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகளில் எத்தீலின் கிளைக்கோல் மற்றும் டைதீலின் கிளைகோல் அதிக அளவில் கலந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் இறப்புக்கு காரணமான மெய்டன் பாராசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் promethazine oral solution, kofexmalin baby cough syrup, makkoff baby cough syrup, margip N cloud syrup போன்ற மருந்துகளை அனைத்து நாடுகளில் இருந்தும் நீக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது