பொங்கல் பரிசு வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணியாததால் கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள் மூலமாக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் டோக்கன் வாங்கியவர்களுக்கு பரிசுத்தொகுப்பு கொடுத்து முடித்த மறு நாளிலிருந்து, டோக்கன் வாங்காதவர்களுக்கும் தடையின்றி பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கடைக்கும் தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் டோக்கன்களின் அடிப்படையில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து காலை, மாலை என இருவேளைகளிலும் பொங்கல் பரிசு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பொங்கல் பரிசு வாங்க வந்த பொதுமக்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருக்கின்றனர். இதன் காரணமாக கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அது மிகவும் ஆபத்தான சூழலை உருவாக்கி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.