இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் ஆன்லைன் பயன்பாடுகள் அதிகரித்ததில் இருந்து இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்கள் முதற்கொண்டு அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததில் இருந்து, மோசடிகளும் அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்வதன் மூலம் வங்கியில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுகின்றனர். அதோடு வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போன்று ஏமாற்றி ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்களிடம் கேட்டுவிட்டு வங்கி பணத்தை மொத்தமாக காலி செய்து விடுகிறார்கள்.
இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை காவல்துறையினர் அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பரை ஒரு பெண்மணி 4 வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்துள்ளார். இதனால் சிம் கார்டு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 8,16,000 மாயமாகியுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் உடனடியாக வங்கியில் இருக்கும் மொபைல் நம்பரை மாற்றி கொள்ளுங்கள். மேலும் கேஒய்சியில் இருக்கும் செல்போன் நம்பரையும் நீக்குமாறு வங்கியிடம் உடனடியாக தெரிவித்து விடுங்கள்.