கென்யா நாட்டில் ஒரு புதரில் கிடந்த பையை பார்த்து சிங்கம் என்று பயந்து வனத்துறை அதிகாரிகளை மக்கள் அழைத்த சம்பவம் நடந்திருக்கிறது.
கென்யா நாட்டில் இருக்கும் மவுண்ட் கென்யா எனும் தேசிய பூங்காவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கின்யானா என்னும் கிராமத்தில் ஒரு பண்ணை இருக்கிறது. அங்கு பணியாற்றி வந்த ஒரு ஊழியர் தன் முதலாளியின் குடியிருப்பிற்கு வெளியில் ஒரு சிங்கம் புதருக்குள் மறைந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அந்தப்பகுதியில் சிங்கங்கள் காணப்படுவதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், வனத்துறை அதிகாரிகள் ஊழியர் அளித்த தகவலின் பேரில் அதிக எச்சரிக்கையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு இருந்தது சிங்கம் கிடையாது. ஒரு பை.
அந்த வீட்டின் உரிமையாளர், விதை சிலவற்றை ஒரு பையில் வைத்து நிழல் இருக்கும் புதரின் அடியில் வைத்திருந்துள்ளார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் உரிமையாளரான அந்த பெண் திரும்பி வந்தவுடன் அவரிடம் சிங்கம் இருக்கிறது எனவும் பின்வாசல் வழியாக வீட்டினுள் செல்லுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன் பின்பு, வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான், அங்கு கிடந்தது பை என்று தெரிய வந்திருக்கிறது. இது தவறுதலாக நடந்த சம்பவம் தான். எனினும் வனத்துறை அதிகாரிகள், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்று பாராட்டி சென்றுள்ளனர்.