ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வாணாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 படுக்கைகள் வசதி உள்ளன. இந்நிலையில் அம்மாவட்டத்தில் அதிக பிரசவம் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர். இதனால் காலை நேரத்தில் வரும் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆனால் மாலை நேரத்தில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, வாணாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் பயனடையும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை வசதியுடன் கூடிய சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மருத்துவகல்லூரி மருத்துவர்களை கொண்டு நாள்தோறும் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல இணை நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.