தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டtதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பத்து லைன்ஸ், கார்வயல் மற்றும் கொள்ளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பாலவாடி லைன் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் தனது குட்டிகளுடன் பாலவாடி லைன்ஸ் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை இரவு நேரத்தில் முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேரம்பாடி வனசரகர் ஆனந்தகுமார், வனவர்கள் கௌதமன் மற்றும் சசிகுமார் போன்றோர் வீடுகளை முற்றுகையிட்ட காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்துள்ளனர். ஆனாலும் அருகில் உள்ள வனப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளில் ஒரு பெண் யானை குட்டி ஈனும் நிலையில் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.