சீனாவில் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் 2.28 லட்சம் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்
சீனாவில் பலத்த மழையின் காரணமாக தென் பகுதியிலும், மத்திய பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக ஹூனான், குவாங்ஜி, குவாங்டுவாங் போன்ற பகுதிகளில் இருக்கும் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து 26,00,000க்கும் அதிகமானோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி முதல் இதுவரை 2,28,000 பேர் அவர்களது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரியப்படுத்தியுள்ளது.
அதோடு ஏற்பட்ட வெள்ளத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாகி 3.7 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட மதிப்பீடில் தெரியவந்துள்ளது. ஹூனான், குவாங்ஜி மாகாணங்களில் 7 பேர் மரணமடைந்து இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வருடந்தோறும் பருவமழையின் காரணமாக சீனாவின் தென் பகுதியில் இருக்கும் ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமாக இருந்ததால் பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டது. 1998-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 30 லட்சம் வீடுகள் சேதம் அடைந்து 2000 பேர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.