புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ள நிலையில் கடலூரில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் புதுச்சேரிக்குள் தமிழக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர் அனைத்து மாநில எல்லைகளுக்குமான போக்குவரத்திற்கு மத்திய அரசே தடை விதித்தது. அதன்படி புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் மே 31ம் தேதி வரை ஊரடங்கில் தளர்வுகள் அளித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் புதுச்சேரியில் நேற்று முதல் தனிமனித இடைவெளியுடன் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், ஆலைகள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட புதுச்சேரி அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில் கடலூர் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு புதுச்சேரி எல்லையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் சிவப்பு மண்டலமாக உள்ளதால் அங்கிருந்து வரும் பொதுமக்கள் யாரையும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கவில்லை. மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவத்துறை தொடர்பான நபர்களை மட்டுமே சோதனை செய்து அனுமதித்து வருகின்றனர். இதனால் அங்கு கொளுத்தும் வெளியில் நுற்றுக்கணக்கானோர் வாகனங்கடன் காத்திருக்கின்றனர்.