வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்த சிறுத்தைப்புலி மேய்ந்து கொண்டிருந்த மாட்டை அடித்துக் கொன்ற சம்பவம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது
நீலகிரி மாவட்டத்திலுள்ள நாயக்கன் சோலை என்ற பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து காட்டு யானை, சிறுத்தை புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவர் ஏராளமான கால்நடைகளை வளர்த்து கொண்டிருக்கிறார். அவரது கால்நடைகள் அப்பகுதியில் உள்ள புல்வெளிக்கு சென்று மேய்ந்து வருவது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம்போல கால்நடைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள புல்வெளிக்கு மேய சென்றபோது திடீரென வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை புலி அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாட்டை அடித்து கொன்றது. இதையடுத்து சிறுத்தைப் புலியைக் கண்டதும் மற்ற கால்நடைகள் அலறியடித்து ஓடியதைப் பார்த்த பொதுமக்கள், சத்தமிட்டபடி அப்பகுதிக்கு விரைந்தனர். அச்சமயம் பொதுமக்கள் வருவதைப் பார்த்த சிறுத்தைப்புலி அந்த மாட்டை அங்கேயே விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது.
இச்சம்பவம் குறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து வரும் சிறுத்தை புலியானது அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த சிறுத்தை புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடுமாறு பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.