Categories
தேசிய செய்திகள்

மக்கள் கட்டாயமாக முகமூடி அணியனும்.. இல்லாட்டி சட்டப்படி நடவடிக்கை பாயும்: உத்தரபிரதேசம் அரசு

உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் அனைவரும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். முகமூடி அணியாமல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்தது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், மகாராஜ்கஞ்ச், சீதாபூர், சஹரன்பூர் மற்றும் பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை அம்மாநில அரசாங்கம் சீல் வைத்து மக்கள் செல்ல தடை விதித்துள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருட்கள் ஹோம் டெலிவரி மூலம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் மற்றும் மருத்துவ குழுக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தலைமை பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே. திவாரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் தலைமை செயலாளர் 15 மாவட்டங்களில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கையை வெளியிட்டார்.

ஆக்ராவில் 22, காசியாபாத்தில் 13, கவுதம் புத் (நொய்டா) நகரில் 12, கான்பூரில் 12, வாரணாசியில் 4, ஷாம்லியில் 3, மீரட்டில் 7, பரேலியில் 1, புலந்த்ஷாரில் 3, பஸ்தியில் 3, ஃபிரோசாபாத்தில் 3, சஹரன்பூரில் 4, மகாராஜ்கஞ்சில் 4, சீதாபூரில் 1 & லக்னோவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். எனவே பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் நோக்கில் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |