காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி பொதுமக்கள் இணைந்து சேரம்பாடி சுங்கம் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கடந்த மாதம் ஒரே வாரத்தில் தந்தை மகன் உள்பட 3 பேர் இறந்தனர். மேலும் காட்டு யானைகள் அட்டகாசமானது சேரம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொளப்பள்ளி, கண்ணம்பள்ளி, செம்பக்கொல்லி மற்றும் சேரம்பாடி சப்பந்தோடு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் எனவும், அகழி வெட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை வனத்துறையினர் கண்டுகொள்ளாததால் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி சேரங்கோடு ஊராட்சி பொதுமக்கள் இணைந்து சேரம்பாடி சுங்கத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறும் பொழுது, காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனில், வருகிற 24-ஆம் தேதி ரேஷன் கார்டுகளை மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டமும், சேரம்பாடியில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.