பழமையான கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ். புரம் பகுதியில் இருக்கும் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2000 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர். அதன் பிறகு அந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான மாரியம்மன் கோவிலை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து பழமையான கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த கோவிலின் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.