குடிநீர் சரியாக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டூர் அருந்ததியர் தெரு பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோபம் அடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.