குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாத கோபத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதிகளில் காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் குறைந்த அளவு விநியோகம் செய்யப்பட்டதால் காவிரி ஆற்றின் கரையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் நேரில் சந்தித்து முறையிட சென்றுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் அதிகாரிகள் இல்லாததால் கோபம் அடைந்த பொதுமக்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்களிடம் உங்கள் பகுதிக்கு போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் போராடி சில மணிநேரத்திலேயே காவிரி குடிநீரானது வழக்கம்போல் விநியோகிக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் அவர்கள் நடத்திய போராட்டத்தால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டனர்.