விருதுநகரில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளுக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் , காவல்துறைக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கீழ ரத வீதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளின் உள்ளே நுழையும் படிகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அகற்றப்பட்ட இடிபாடுகளின் கற்களும் மணலும் ஆங்காங்கே வீட்டின் முன்பு குவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கும் முயற்சியில் ஜேசிபி இயந்திரங்களுடன் இறங்கினர்.
அப்பொழுது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்பகுதி மக்கள் ஏற்கனவே இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்று என்று கூறியதோடு, அடுத்த படிக்கட்டுகளை இடிக்கக்கூடாது என்று தெரிவித்தனர். பின் திடீர் என அப்பகுதி மக்கள் கீழரத வீதி திமுக நிர்வாகி மணிகண்டன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ ரத வீதி ஸ்ரீவில்லிபுத்தூர் இன் முக்கிய பகுதி என்பதால் மறியல் போராட்டத்தின் விளைவாக போக்குவரத்து நெரிசல் தாறுமாறாக அதிகரித்தது. போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் வலியுறுத்திய பொழுது பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.