மருந்துகள் வராததால் தடுப்பூசி போடுவதற்காக சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நெகமம், கோட்டூர், ஆனைமலை போன்ற பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு 18 வயது முதல் 44 வயது வரை இருக்கும் 700 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட 300 பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் நாச்சிமுத்து பிரசவ விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளனர். ஆனால் மருந்துகள் இன்னும் வந்து சேராததால் தடுப்பூசி போடும் பணியானது நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தடுப்பூசிகளை பொள்ளாச்சிக்கு ஏற்றி வந்த வாகனம் திருச்சி அருகே பழுதான காரணத்தினால் சரியான நேரத்திற்குள் தடுப்பூசி வந்து சேரவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே மருந்துகள் வந்த உடனே தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.