குடிநீர் ஒழுங்காக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கோபத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமத்தில் உள்ள காலனிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் இணைந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குடிநீர் வராத கோபத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கு உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்றனர்.
அதன் பின் அந்த வழியாக வந்த ஒரு அரசு டவுன் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பி உள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், பெரியதச்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் ஊராட்சி செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.