கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு வளைவுப் பகுதி மிகவும் ஆபத்தாகக் காட்சியளிக்கிறது. போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்லும் பாதையில் இருக்கும் பாறைகள் மண் அரிப்பின் காரணமாக, போதுமான பிடிமானம் இல்லாமல் காட்சி அளிக்கின்றன. இது அப்பகுதியில் பயணிக்கும் மக்களுக்கு பாறைகள் விழுந்து விடுமோ என்னும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த நெடுஞ்சாலையில் விளக்குகள் பொருத்தப்படாததால், இரவு நேரத்தில் பயணிப்பது கடினமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இங்கு குளிர் காலத்தில் சாலைகள் தெரியாத அளவிற்குப் பனி சூழ்ந்துவிடுவதால் 18 வளைவுகளில் பயணிப்பது மிகப் பெரிய சவால் ஆகத் தான் மக்களுக்கு இருக்கிறது. இப்பகுதியில் சாலைகளைப் பனி மறைப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன .மலையின் அழகை ரசிக்க வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட, உடனடியாக காப்பாற்றுவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இங்கு இல்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இத்தகைய ஆபத்தான பயணத்தைத் தினந்தோறும் பயணிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.