குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வள்ளியரச்சல் பேருந்து நிலையத்திலிருந்து தென்னங்குடிபாளையம் வரை தார்சாலை உள்ளது. கடந்த காலங்களில் பெய்த கனமழை காரணமாக இந்த தார் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்த வழியாக லாரி, டெம்போ, கார் போன்ற கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் அடிக்கடி சென்று வருகின்றன.
மேலும் விளை பொருட்களை ஏற்றி செல்லும் டிராக்டரும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் படர்ந்திருக்கும் முட்புதர்களை அகற்றி, குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.