பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூத்திரெட்டிபட்டி கிராமத்தில் 1,2௦௦ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் இந்த சுகாதார வளாகம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலி வேலை பார்த்து வருவதால் அங்குள்ள வீடுகளில் கழிவறை வசதி இல்லை. அதோடு அந்த பகுதியில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் பயன் இல்லாமல் போனதால், திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி அப்பகுதி பெண்கள் கூறும்போது, பெண்கள் சுகாதார வளாகத்தை சுகாதார வளாகம் கட்டிய சில ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தி வந்ததாகவும், அதன் பின்னர் இந்த வளாகத்தை சரியாக பராமரிக்காததால் பொதுமக்கள் இதனை பயன்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மேலும் அந்த சுகாதார வளாகத்தை சுற்றி செடி மற்றும் கொடிகள் வளர்ந்து அந்த இடமே புதர்மண்டி கிடக்கிறது. எனவே சுகாதார வளாகத்தை சீரமைத்து தேவையற்ற செடிகளை அகற்றி அதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.