பத்து நாட்களுக்கும் மேலாக தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனசேகரன் நகர், ராம் நகர், முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர் மற்றும் குறிஞ்சி நகர் போன்ற இடங்களில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து விட்டது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் மற்ற இடங்களுக்கு சென்று தங்கி விட்டனர். ஆனால் மாநகர பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளதால் மாநகராட்சி சார்பில் மோட்டார்கள் வைத்து மழை நீரை அகற்றும் பணியானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் குறைந்தளவு மோட்டார் வைத்து மழை நீர் அகற்றபடுவதால் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் பச்சை நிறமாக மாறி வருவதால், துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் ரப்பர் டியூப் மூலம் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர். எனவே அதிகளவு மோட்டார் வைத்து நீரினை விரைவில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.