ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அவர்கள் கொரோனா காலகட்டத்தில் மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் காளிமுத்து தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு, தாலுகா செயலாளர் சேதுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் குருசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.