பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து தர வேண்டி பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்திலுள்ள கீழையூர் ஒன்றியம் பகுதியில் வெள்ளை ஆற்றிலிருந்து ஏர்வைகாடு என்ற இடத்தில் இருந்து பிரிந்து சந்திர நதி ஆறு செல்கிறது. இந்த ஆறு வேதாரண்யம் கால்வாயில் கலந்து கடலில் கலக்கிறது. இந்த சந்திரநதி ஆறு மூலம் அப்பகுதியில் உள்ள 2000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதனையடுத்து கருங்கண்ணி பகுதியில் சந்திரநதியின் குறுக்கே இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் தூண்கள் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டன.
இந்நிலையில் திடீரென பாலம் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் இருக்கிறது. இதனால் பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையின் விவசாயத்திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆற்றின் வழியாக வரும்போது விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்வார்கள்.
ஆனால் தற்போது பாலத்தின் பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வரும் தண்ணீரானது ஏற்காடு தடுப்பணையிலேயே தேங்கி நின்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு முன் பாலம் கட்டும் பணியை தொடங்கி விரைந்து முடித்து தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.