பாசி தூசிகள் கலந்து துர்நாற்றத்துடன் வரும் குடிநீரால் பொதுமக்கள் அச்சத்தில் அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் நீர் எடுத்து சுத்தம் செய்யப்பட்டு பின்பு தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
பின்பு பொதுமக்களுக்கு தொட்டிகளில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இம்முறையில் வினியோகிக்கப்படும் தண்ணீர் கடந்த சில தினங்களாக பாசி தூசிகள் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இவ்வாறு தண்ணீர் மோசமான நிலையில் வந்தாலும் அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக வலைகள் மூலம் பாசி தூசிகளை வடிகட்டி குடிநீரை குடங்களில் பிடித்து வைத்து கொள்கின்றனர்.
பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து பயன்படுத்தினாலும் நீரின் நிறம் மாறவில்லை. இதனால் மக்களுக்கு சுகாதாரக் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை மாதம் ஒருமுறை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீரை பொது மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.