திருப்பத்தூரில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தவர்களுக்கு கலெக்டர் அபராதம் விதித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து கலெக்டர் அமர் குஷ்வாஹா, சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை போன்றோர் ஜின்னா ரோடு, ஆலங்காயம் மெயின் ரோடு, நகைக்கடை பஜார், பேருந்து நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் முகக்கவசம் அணியாமல் இருந்த உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 200 ரூபாய் அபராதமும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் அதிகாரிகள் விதித்துள்ளனர்.
அதேபோன்று அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறியவர்வளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அதிகாரிகள் விதித்துள்ளனர். அப்போது தாசில்தார் சிவப்பிரகாசம், மண்டல தாசில்தார் ரேவதி, வருவாய் ஆய்வாளர் சிவப்பிரகாசம், சிலம்பரசன், மற்றும் வருவாய் துறையினர் அவருடன் இருந்தனர். இதுகுறித்து கலெக்டர் கூறியபோது இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. எனவே தினசரி 21 முதல் 25 நபர்கள் வரை மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே பொதுமக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.