பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மூட்டா பேராசிரியர் சங்கம் சார்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மூட்டா பேராசிரியர் சங்கம் சார்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி முதல்வரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனவும், நெல்லை மாவட்டத்தில் உள்ள 2 தனியார் கல்லூரியில் உள்ள ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்தனர். மேலும் இந்த போராட்டத்தில் துணைத்தலைவர் நசீர் அகமது, மண்டல செயலாளர் சிவஞானம், பொருளாளர் கோமதிநாயகம் உள்பட கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.