கடந்த 14 நாட்களாக சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 61 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்திப்பில் ஈடுபட்ட சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் கூறியதாவது, ” புதிதாக கொரோனா பாதிக்காத பட்டியலில் மகாராஷ்டிராவை சேர்ந்த லாதூர், உஸ்மானாபாத், ஹிங்கோலி & வாஷிம் ஆகிய மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன என தெரிவித்தார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சமயத்தில், டயாலிசிஸ், எச்.ஐ.வி / புற்றுநோய் சிகிச்சைகள் போன்ற சேவைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் விரிவான வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தேவையான தொற்று மேலாண்மை தடுப்பு இருக்க வேண்டும் என லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். நேற்று வரை, கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 18601 ஆக இருந்தது. நேற்று மட்டும் சுமார் 705 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, நாடு முழுவதும் இதுவரை 3,252 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சதவிகிதம் 17.48% ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,329 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 பேர் காரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.