கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியினை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை ஆகியவற்றின் சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் செந்தில்குமார், உதவி தீயணைப்பு அலுவலர் ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் எதிர்பாராமல் ஏற்படும் தீவிபத்துக்களின்போது அதை அணைக்கும் முறை, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்பாக செயல்விளக்கத்துடன் ஒத்திகை நடத்தப்பட்டது. இதனையடுத்து மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் எந்திரங்கள், அதிநவீன கருவிகள், நீரில் மூழ்கியவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான ஜாக்கெட்டுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின் தர்மபுரி கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை துறை 24 மணி நேரமும் செயல்படும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பேரிடர் கால அவசர சிறப்பு தொலைபேசி எண் 112-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு நடைபெற்ற நிகழ்ச்சியினை கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டரான சித்ரா விஜயன், உதவி கலெக்டர் கவுரவ குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், பேரிடர் மேலாண்மை துறை தனி தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.