தர்மபுரி மாவட்டத்தில் ஜருகு கிராமத்தில் 45 ஏக்கரில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் பல வருடங்களாக நீர் நிரம்பியதே இல்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் கனமலையின் காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஏரி நிரம்பியதால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி தலைமையில் ஏரிக்கு சென்று மலர் தூவி தண்ணீரை வரவேற்று மரியாதை செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது “இந்த ஏரியில் இருக்கும் தண்ணீர் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் புட்டான் ஏரியும் பெரிய ஏரியும் சின்னப்பன்பட்டி வழியாக மேட்டூர் அணை வரை உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர் வழி பாதையை தூர்வாரி தடுப்பணைகளை அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தற்போது ஆக்கிரமிப்புகளால் மழை நீர் வெளியேற முடியாமல் விவசாய நிலங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வழிவகை செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.