திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பகுதியில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசி அவமதிப்பு செய்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இனாம்குளத்தூர் பகுதியிலுள்ள சமத்துவபுரத்தில் நுழைவுவாயிலில் பெரியார் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மீது காவிச்சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். அதிகாலை 5 மணியளவில் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலையினை சுத்தம் செய்தனர். இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைதுச்செய்ய வலியுறுத்தி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.