பெரியார் சிலை தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருவதை, திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் இருக்கும் பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியை தூவி, செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள். இவ்வாறு பெரியார் சிலை சேதப்படுத்துவது தொடர்ந்து நடக்கிறது. இது பற்றி திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், கோவை மாவட்டம், வெள்ளலூரில் தந்தை பெரியாரின் சிலைக்கு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்ந்து நடக்கிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது மற்றும் தண்டனை விதிப்பது மெத்தனப்போக்காக உள்ளது. இது குற்றவாளிகளுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கிறது.
கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றவாளிகள், மனநோயாளிகள் என்று கூறி வழக்கை முடித்து விடுவது காவல்துறையின் வழக்கமாகிவிட்டது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். காவல்துறையினரை துரிதப்படுத்தி, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் இதற்கு முடிவு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.